Thursday, November 29, 2007

விராடபுரி சக்கர விநாயகர் இரட்டை மணிமாலை

காப்பு
பாயிரம் பாடிட பாதை யளித்திட்ட
ஆயிரங் கண்ணினன் நாரண நான்முகன்
வேயுறு தோளினன் மாதொரு பாங்கினன்
தாயுறு வேழந் துணை.

வெண்பா
எண்ணிய நெஞ்சத் தெழில்வடி வாளனின்
திண்ணிய பேருடல் தேர்ந்தறி வாகிடின்
சக்கர நாயகன் கோலமுங் கண்டபின்
சொக்கிடுங் கண்களுந் தான்
கலித்துறை
சந்திர சூரிய தேவர னைவருங் கண்டனரே
மந்திர சக்கர நாயக னைங்கர வேதியனே
சுந்தர சோலை விராட புரியதன் சந்திரனே
கந்தரின் மூத்த வனாகிய மாகரி நாயகனே

வெண்பா
உத்தர திக்கதில் ஊர்ந்திடுந் தாயவள்
சத்திய வாக்கினில் வாழம ராவதி
நித்தமும் போற்றிட சக்கர நாயகன்
சத்தமு மின்றியிருந் தான்
கலித்துறை
வடதிசை காத்திட தில்லா புரியா ளிருந்திடவே
ஆடற் குடதிசை வாழ்ந்திடு சக்கர நாயகனே
தென்திசை நோக்கின் குறுமுனி யீசருஞ் சேர்ந்திடவே
அன்பொடு சொக்கரு மங்கயற் கண்ணியுங் கீழ்திசையே

வெண்பா
பகவா னவர்தங் கரத்தா லளித்தார்
தகவா யுனையே புவிவாழ் பவர்க்கு
மிகவே யருளதை சக்கர நாயகனே
வேகத் தருளிடு வாய்
கலித்துறை
சந்தன மாலையை சாற்றிட வேண்டிய காரணத்தால்
வந்தனங் கோடி மணத்திட மாண்பொடு சேர்த்திடுவேன்
தந்தன வென்றிட பாவகை பாட துணையெனவே
எந்தனை யென்றுமே யேற்றிடு சக்கர நாயகனே

வெண்பா
பாரத பூமியில் வாழ்ந்திடு மாந்தரை
நேரது வாண்டிட சக்கர நாயகன்
பாண்டவ ரைவருந் தங்கிட வோரிடங்
கண்டன னுத்தரக் கோன்
கலித்துறை
வேழ முகத்தா யெனமுன் னுரைத்திட வேண்டிடவே
தோழமை தந்தா யெனக்கென வானவ வேதியரே
பாழென வென்றிருந் தேனிப் புவிமிசை வாழ்வதனை
தாழென வீழ்ந்ததை நீக்கிய சக்கர நாயகனே

வெண்பா
ஆரியர் யாவரு மோதிடு மோவியம்
பாரினி லோருயிர் தானெனத் தோணின்
திராவிட மேற்றிடுஞ் சக்கர நாத
விராட நகரக் கரி
கலித்துறை
ஞானப் பொருளென ஞானியர் பால்தான் விளங்கிடுநல்
மோன வுருவமா யென்றனை யாட்கொள வேண்டியதால்
தேனத னைப்போ லினிக்குஞ் சக்கர நாயகனே
வானத னையா னடைய தருவா யொருவழியே

வெண்பா
கண்டிலேன் வானவ ராயிரம் போற்றிடும்
மண்ணிலே யென்றனுக் கோர்துணை யாகிடும்
விண்ணவன் வேணியன் மைந்தனு மாகிய
வண்ணத்து சக்கரத் தான்
கலித்துறை
அம்புலி தேய்ந்திட காரண மொன்றினை யாத்தவனே
தும்புரு நாரதர் தாமொடு வேதியர் போற்றிடவே
தம்பி யனென்றிட கூர்வடி வேலனை கொண்டவனே
வம்பென வொன்று வராம லறுத்திடு சக்கரமே

வெண்பா
அலையதிற் தோன்றிய தெள்ளமு தொத்தவன்
மாலை யணிந்திரு மாலின் மருமகன்
வேலை யதேயென சக்கர வேழனை
காலை யிலேதொழு வோம்
கலித்துறை
வாரண நாயக நால்திசை போற்றிடு தெள்ளியனை
காரண மின்றி கருத்தி லிருத்திடின் கற்பகத்தை
ஓரணங் கென்றவன் பொற்பதம் வேண்டி பிடித்திருப்பின்
பேரணங் காயிடுஞ் சக்கர நாயக வைங்கரனே

வெண்பா
தாமென் றிருப்பின் தடைக ளளித்திடும்
யாமென் றிருந்தா லதுவே விலகிடும்
வேழ முகத்து விநாயக சக்கரன்
தாழ்மலர் தானடை வீர்
கலித்துறை
கானகத் தேயுறை கின்ற கரியருஞ் சக்கரத்தை
நானகத் தேகண் டிடவே வழியொன் றெனவுளதோ
தானகத் தில்தோன் றிடவே யொருநாளுந் தீர்வெடுப்பார்
வானகத் தேவாழ்ந் துவருங் களிற்றினை வேண்டிடவே

வெண்பா
சுமையென் றிடுவா ரமுதென வாழ்வை
இமைபோ லதனை காத்திட வேண்டின்
உமையா ளவளுடை சக்கர மைந்தன்
தமைநா ளெனயேற் றிடுவார்
கலித்துறை
பாசமே வோர்வுரு வென்றிட நாளதுஞ் செப்புகையில்
ஈசருந் தேவியுஞ் சீரொடு காத்திட வந்திடுவார்
காசதைத் தான்தவிர்த் தேயிரு மன்ப ரவர்க்கருள
வாசனை யாவையுஞ் சக்கரஞ் சுற்றி யறுத்திடுமே

வெண்பா
தெண்டனிட் டேனுன் றமது பதமதில்
மண்டியிட் டேனைங் கரக்களிற் றான்றனை
பாவித் தெழுந்தேன் அலைமகட் சேயனை
சேவித் திருப்பேன்சக் கரத்தை
கலித்துறை
சேவகன் யானிவன் பாயிரம் யாத்தவை யாவதுமே
பாவகை ரெட்டை மணியது மாலையே சூட்டிடவே
தேவ விராட மலர்முக சக்கர நாயகனை
ஆவன யாவையுஞ் செய்திட வாழ்த்திட வேண்டினனே

6 comments:

KB said...

நன்று நன்று :)
அய்யா, ஒரு சிறிய விண்ணப்பம்,
செய்யுளின் பொழிப்புரையையும் இவன் விளக்க முடியுமா?
முக்கியமாக புலவர் பயன்படுத்தியுள்ள "சொல் மற்றும் பொருள்" நயம், காப்பு போன்றவற்றை விளக்குங்கள்.
இலக்கிய தமிழ் படித்து பல நாட்கள் ஆனதால் என்னால் அவற்றை செய்யுளில் கண்டு அறிய முடியவில்லை :(

- பாலாஜி

Ambasoft said...

நன்றி kb,
இது எனது இலக்கியப் படைப்பு.
இது வெண்பா , கலித்துறை என்ற இருமணிகளால் மாலையாக புனையப்பட்டது

KB said...

oo.. thangalathu padaipa? mikka nandru :) irattimani maalai :) super..

Ambasoft said...

நன்றி. நீரோட்டகம் கண்டீரா?

Anand said...

உங்கள் படைப்பு தமிழ் வளத்துடன் அழகாக இருந்தது .இரட்டை மணி மாலை என்பது இவ்விரண்டு வகைப் பாக்களை மட்டும் கொண்டதா அல்லது வேறு இரண்டு வகைகளையும் சேர்க்கலாமா?

Ambasoft said...

நன்றி அன்பு நண்பர் ஆனந்த் அவர்களே..
மேலும் இரண்டு வகைகள் சேர்ந்தால்
அது நான்மணிமாலை ஆகும்.