Tuesday, February 19, 2008

கந்தர் சிலேடை வெண்பா

முருகன்,தமிழ்
சீரழகு தான்கொண்டு கூர்வடிவந் தாங்கிடலால்
பேரவையில் மாந்தருக் காறுதலை காட்டுதலால்
அகவலெனுஞ் சீரோசை நாகமொடு சேர்தல்
தகவலது வேலவனுந் தமிழ்

முருகன்,மலை
ஓங்கி வளர்ந்து தலையது வாறாகி
தாங்க வொருவேல் மயிலுந் தரித்து
குறுமுனி வாழ்த்தத் தமிழு மளித்த
முருகன் நிகரே மலை

முருகன்,ஈசன்
வேழறுத்து பாழ்களையுங் கார்த்திகை வெஞ்சுடரே
வாழலென வேண்டுவரைக் கூர்தண்டு காத்திடுமே
நீர்கொள் சிரமதனால் சீர்பெற வாழ்த்துதலால்
நேர்தா னரனொடு வேல்

முருகன், அருச்சுனன், திருமால்
வில்லெடுத் தேநன் மகள் பிடித்திட்டான்
கல்லுண்டான் மாம னெனக் கொண்டிட்டான்
கூர்முனை நாகமுங் கொண்டா னெனவேதான்
பார்த்தனும் மால்மருகன் நேர்.

முருகன், தென்றல்
குன்ற மிருத்தலா லீர முணர்த்தலால்
என்றும் மனிதருள் வெம்மை களைதலால்
வாயில் வழிநின்று மெல்ல வருடலால்
கோயில் முருகன் வளி

முருகன்,சிலம்பு
தமிழில் புகழ்ந்து மணியோசை சூடி
நிமிர்ந்த நன்னீதி நாட்டலால் மேதினியில்
வள்ளியுங் கொண்டிட தெள்ளிய வேலனும்
வெள்ளிச் சிலம்பும் நிகர்

முருகன்,குறுமுனி
மலைமே லிருந்து தமிழை வளர்த்து
நிலையாய் புவியதில் சித்தரும் வாழ்த்திட
கொண்டன ராறென மேதினி மீதினில்
கண்டால் குறுமுனி வேல்

முருகன்,சூரியன்
சேவற் குறிப்பினைக் கொண் டுணர்த்தலால்
காவலாய் மேலே கவச மளித்ததால்
ஞாலத்து காரிருள் நன் கறுத்திட்ட
கோலத்து வேலன் கதிர்

முருகன்,ஔவை
வேழ முகத்தானைக் கண்டு களித்து
கிழத் துருவத்தை கொண்டு சிறந்த
தமிழ் போற்றுந் தயையுடை யாயின்
அமிழ்தனை கந்தனு மவ்வை

முருகன்,கடல்
சூழ்ந் தணைத்தலா லாறு யிணைதலால்
ஆழ்ந் தருளி யறுமீன் கொண்டதால்
முத்துச் சிரிப்பினால் மோன நிலையினால்
சித்தன் குமரன் கடல்

17 comments:

cdk said...

கற்பனை என்றாலும்! கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்!

அருமையான பதிவு நண்பரே! தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்! பதிவுலகிற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Ambasoft said...

மிக்க நன்றி நண்பரே

Anand said...

அருமையிலும் அருமை .... எனக்கு உரைநடைதான் வரும் .....பா எழுத முயன்றதில்லை .
இதிலும் ஒரு ஐயம் .இது பா விதிமுறைப்படி எங்கும் விதி மாறாமல் எழுதப்பட்டுள்ளதா அல்லது புதுக்கவிதைப் போன்று விதி இல்லையா ? ஏனென்றால் பார்ப்பதற்கு 15 சீர் இருந்தாலும் நியமத்தின் படி இல்லாமல் இருக்கலாம் அல்லவா ?

Ambasoft said...

இது பா விதியின் படி தான் வடித்துள்ளேன். நியமத்தின் படி இருந்தால் தான் அதற்கு வெண்பா எனப் பெயரிடலாம். இல்லை என்றால் அதனை வெண்பா எனல் இயலாது

Arun said...

மிகவும் அருமை.. மென்மேலும் எழுதுங்கள்.. மெருகுற எழுதுங்கள்.. இதுவே உண்மையான தமிழ்த்தொண்டு!!

Ambasoft said...

மிக்க நன்றி

Anand said...

முருகனுக்கும் கடலுக்குமான சிலேடை ரொம்ப பிரமாதம் .... எல்லா விவரங்களும் மிக அழகாக சேர்க்கப் பட்டுள்ளன .....முத்து , மௌனம் , ஆறு இணைத்தல் (அசத்திட்டீங்க இதில் ).... அற்புதம் .

Anand said...

யறுமீன் கொண்டதால்.... விளக்கவும்

Ambasoft said...

அறுமீன் என்றால் ஆறு+மீன் =>கிருத்திகை.
மற்றும் கடலில் வாழும் மீன்கள்

Ambasoft said...

மிக்க நன்றி ஆனந்த்

Vinu said...

மிக அருமை. வாழ்த்துக்கள்.
குறிப்பாக தமிழுக்கும் தென்றலுக்கும் சிலம்புக்கும் முருகனை னேர் செய்துள்ளது அருமை.

// அகவலெனுஞ் சீரோசை நாகமொடு சேர்தல்
// முருகன்,ஈசன்
// முருகன், அருச்சுனன், திருமால்

விளக்கம் தேவை... :)

Ambasoft said...

மயில் அகவும் முருகனைச் சேரும், தமிழில் அகவற்பா உள்ளது.

நாகபந்தம் என்ற கவிதைமுறை தமிழில் உள்ளது, முருகன் காலின் அருகில் நாகம் உள்ளது

Ambasoft said...

முருகன்,ஈசன்

வேழறுத்து -> ஈசன் தாருகாவனத்து ரிஷிகள் ஏவியயானையை அழித்து அதன் தோலை அணிந்தார்.
முருகன் கஜமுகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தார்.
பாழ்களையும் -> நமது வினைகளையும்
கார்த்திகை வெஞ்சுடர் -> ஈசன் திருவண்ணாமலை சுடர். முருகன் கார்த்திகை தினத்தில் நெற்றிக்கண் சுடரிலிருந்து உதித்தவன்
கூர்தண்டு காத்திடுமே -> வேல், சூலம்
நீர்கொள் சிரமதனால்-> ஈசன் சிரத்தில் கங்கை உள்ளால், திருநீறு அணிந்த சிரத்தை உடையவன் முருகன்

Ambasoft said...

முருகன், அருச்சுனன், திருமால்
வில்லெடுத்து நன்மகள் பிடித்திட்டான்
-> வேடன் வள்ளியை, அருச்சுனன் பாஞ்சாலியை, ராமன்(திருமால்) சீதையை

கல்லுண்டான் மாம னெனக் கொண்டிட்டான-> கல்லுண்ட திருமாலை மாமனெனக் கொண்டான் முருகன்,அருச்சுனன் இருவரும்.
திருமால் கம்சனை மாமனெனக் கொண்டான்

கூர்முனை நாகமுங் கொண்டான் ->
முருகன் நாகத்தை தன் காலருகே கொண்டுள்ளான், அருச்சுனன் நாகாஸ்த்திரம் கொண்டான், திருமால் பாம்பணைமேல் பள்ளி கொண்டான்

Vinu said...

நன்றிகள் பல. அகவல் பற்றி தெரியும் ஆனால் நாகபந்தம் என்ற கவிதைமுறை தமிழில் உள்ளது பற்றி இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். நன்றி...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...
This comment has been removed by the author.
பிரதீப் - கற்றது நிதியியல்! said...

Amba,
விளக்கங்களுக்கு நன்றி!!