Sunday, March 16, 2008

சித்திரக்கவி - இரட்டை நாகபந்தம்

இது சித்திரக்கவியின் வகைகள் பலவற்றுள் ஒன்று. மேலும், அட்டநாகபந்தம்,இரதபந்தம், முரசபந்தம் என பந்த கவிகள் பல வகை உண்டு.
இரட்டை நாக பந்தத்தில் , நேரிசைசிந்தியல் வெண்பா மற்றும் இன்னிசை சிந்தியல் வெண்பா கொண்டு வடித்துள்ளேன்.

நேரிசை வெண்பா:-
செஞ்சடை நாதனை செம்புலத் தாணுவை
விஞ்சிடவே தாரணியில் ஆகாதே - என்றும்தான்
அஞ்சுகம் கொண்டான் தலை.

விளக்கம்:-
செம்மையான சடையும் செம்மையான நிலத்தினை உடயவனுமாகிய ஈசனை விஞ்சிட இப்புவியில் யாராலும் இயலாது. என்றுமே கிளியை(அங்கயற்கண்ணி) கொண்டவனே சிறந்தவன்

இன்னிசை வெண்பா:-
விண்ணவர் தம்மொடு புண்ணிய மாகிய
நற்செஞ் சுடரே கொடுத்திடா யென்றுநான்
பாடுவேன் நாபியில்தே டாதது.

விளக்கம்:-
விண்ணுலகத்தோர் மிகப் புண்ணியமானது என எண்ணும் சுடரோனே!நாபியாகிய மணிபூரகத்தின் உள்ளே தேட இயலாதவற்கு ஒளி அளித்திடுவாயா?.




Tuesday, February 19, 2008

கந்தர் சிலேடை வெண்பா

முருகன்,தமிழ்
சீரழகு தான்கொண்டு கூர்வடிவந் தாங்கிடலால்
பேரவையில் மாந்தருக் காறுதலை காட்டுதலால்
அகவலெனுஞ் சீரோசை நாகமொடு சேர்தல்
தகவலது வேலவனுந் தமிழ்

முருகன்,மலை
ஓங்கி வளர்ந்து தலையது வாறாகி
தாங்க வொருவேல் மயிலுந் தரித்து
குறுமுனி வாழ்த்தத் தமிழு மளித்த
முருகன் நிகரே மலை

முருகன்,ஈசன்
வேழறுத்து பாழ்களையுங் கார்த்திகை வெஞ்சுடரே
வாழலென வேண்டுவரைக் கூர்தண்டு காத்திடுமே
நீர்கொள் சிரமதனால் சீர்பெற வாழ்த்துதலால்
நேர்தா னரனொடு வேல்

முருகன், அருச்சுனன், திருமால்
வில்லெடுத் தேநன் மகள் பிடித்திட்டான்
கல்லுண்டான் மாம னெனக் கொண்டிட்டான்
கூர்முனை நாகமுங் கொண்டா னெனவேதான்
பார்த்தனும் மால்மருகன் நேர்.

முருகன், தென்றல்
குன்ற மிருத்தலா லீர முணர்த்தலால்
என்றும் மனிதருள் வெம்மை களைதலால்
வாயில் வழிநின்று மெல்ல வருடலால்
கோயில் முருகன் வளி

முருகன்,சிலம்பு
தமிழில் புகழ்ந்து மணியோசை சூடி
நிமிர்ந்த நன்னீதி நாட்டலால் மேதினியில்
வள்ளியுங் கொண்டிட தெள்ளிய வேலனும்
வெள்ளிச் சிலம்பும் நிகர்

முருகன்,குறுமுனி
மலைமே லிருந்து தமிழை வளர்த்து
நிலையாய் புவியதில் சித்தரும் வாழ்த்திட
கொண்டன ராறென மேதினி மீதினில்
கண்டால் குறுமுனி வேல்

முருகன்,சூரியன்
சேவற் குறிப்பினைக் கொண் டுணர்த்தலால்
காவலாய் மேலே கவச மளித்ததால்
ஞாலத்து காரிருள் நன் கறுத்திட்ட
கோலத்து வேலன் கதிர்

முருகன்,ஔவை
வேழ முகத்தானைக் கண்டு களித்து
கிழத் துருவத்தை கொண்டு சிறந்த
தமிழ் போற்றுந் தயையுடை யாயின்
அமிழ்தனை கந்தனு மவ்வை

முருகன்,கடல்
சூழ்ந் தணைத்தலா லாறு யிணைதலால்
ஆழ்ந் தருளி யறுமீன் கொண்டதால்
முத்துச் சிரிப்பினால் மோன நிலையினால்
சித்தன் குமரன் கடல்