Sunday, March 16, 2008

சித்திரக்கவி - இரட்டை நாகபந்தம்

இது சித்திரக்கவியின் வகைகள் பலவற்றுள் ஒன்று. மேலும், அட்டநாகபந்தம்,இரதபந்தம், முரசபந்தம் என பந்த கவிகள் பல வகை உண்டு.
இரட்டை நாக பந்தத்தில் , நேரிசைசிந்தியல் வெண்பா மற்றும் இன்னிசை சிந்தியல் வெண்பா கொண்டு வடித்துள்ளேன்.

நேரிசை வெண்பா:-
செஞ்சடை நாதனை செம்புலத் தாணுவை
விஞ்சிடவே தாரணியில் ஆகாதே - என்றும்தான்
அஞ்சுகம் கொண்டான் தலை.

விளக்கம்:-
செம்மையான சடையும் செம்மையான நிலத்தினை உடயவனுமாகிய ஈசனை விஞ்சிட இப்புவியில் யாராலும் இயலாது. என்றுமே கிளியை(அங்கயற்கண்ணி) கொண்டவனே சிறந்தவன்

இன்னிசை வெண்பா:-
விண்ணவர் தம்மொடு புண்ணிய மாகிய
நற்செஞ் சுடரே கொடுத்திடா யென்றுநான்
பாடுவேன் நாபியில்தே டாததை.

விளக்கம்:-
விண்ணுலகத்தோர் மிகப் புண்ணியமானது என எண்ணும் சுடரோனே!நாபியாகிய மணிபூரகத்தின் உள்ளே தேட இயலாதவற்கு ஒளி அளித்திடுவாயா?.


Tuesday, February 19, 2008

கந்தர் சிலேடை வெண்பா

முருகன்,தமிழ்
சீரழகு தான்கொண்டு கூர்வடிவந் தாங்கிடலால்
பேரவையில் மாந்தருக் காறுதலை காட்டுதலால்
அகவலெனுஞ் சீரோசை நாகமொடு சேர்தல்
தகவலது வேலவனுந் தமிழ்

முருகன்,மலை
ஓங்கி வளர்ந்து தலையது வாறாகி
தாங்க வொருவேல் மயிலுந் தரித்து
குறுமுனி வாழ்த்தத் தமிழு மளித்த
முருகன் நிகரே மலை

முருகன்,ஈசன்
வேழறுத்து பாழ்களையுங் கார்த்திகை வெஞ்சுடரே
வாழலென வேண்டுவரைக் கூர்தண்டு காத்திடுமே
நீர்கொள் சிரமதனால் சீர்பெற வாழ்த்துதலால்
நேர்தா னரனொடு வேல்

முருகன், அருச்சுனன், திருமால்
வில்லெடுத் தேநன் மகள் பிடித்திட்டான்
கல்லுண்டான் மாம னெனக் கொண்டிட்டான்
கூர்முனை நாகமுங் கொண்டா னெனவேதான்
பார்த்தனும் மால்மருகன் நேர்.

முருகன், தென்றல்
குன்ற மிருத்தலா லீர முணர்த்தலால்
என்றும் மனிதருள் வெம்மை களைதலால்
வாயில் வழிநின்று மெல்ல வருடலால்
கோயில் முருகன் வளி

முருகன்,சிலம்பு
தமிழில் புகழ்ந்து மணியோசை சூடி
நிமிர்ந்த நன்னீதி நாட்டலால் மேதினியில்
வள்ளியுங் கொண்டிட தெள்ளிய வேலனும்
வெள்ளிச் சிலம்பும் நிகர்

முருகன்,குறுமுனி
மலைமே லிருந்து தமிழை வளர்த்து
நிலையாய் புவியதில் சித்தரும் வாழ்த்திட
கொண்டன ராறென மேதினி மீதினில்
கண்டால் குறுமுனி வேல்

முருகன்,சூரியன்
சேவற் குறிப்பினைக் கொண் டுணர்த்தலால்
காவலாய் மேலே கவச மளித்ததால்
ஞாலத்து காரிருள் நன் கறுத்திட்ட
கோலத்து வேலன் கதிர்

முருகன்,ஔவை
வேழ முகத்தானைக் கண்டு களித்து
கிழத் துருவத்தை கொண்டு சிறந்த
தமிழ் போற்றுந் தயையுடை யாயின்
அமிழ்தனை கந்தனு மவ்வை

முருகன்,கடல்
சூழ்ந் தணைத்தலா லாறு யிணைதலால்
ஆழ்ந் தருளி யறுமீன் கொண்டதால்
முத்துச் சிரிப்பினால் மோன நிலையினால்
சித்தன் குமரன் கடல்

Thursday, November 29, 2007

விராடபுரி சக்கர விநாயகர் இரட்டை மணிமாலை

காப்பு
பாயிரம் பாடிட பாதை யளித்திட்ட
ஆயிரங் கண்ணினன் நாரண நான்முகன்
வேயுறு தோளினன் மாதொரு பாங்கினன்
தாயுறு வேழந் துணை.

வெண்பா
எண்ணிய நெஞ்சத் தெழில்வடி வாளனின்
திண்ணிய பேருடல் தேர்ந்தறி வாகிடின்
சக்கர நாயகன் கோலமுங் கண்டபின்
சொக்கிடுங் கண்களுந் தான்
கலித்துறை
சந்திர சூரிய தேவர னைவருங் கண்டனரே
மந்திர சக்கர நாயக னைங்கர வேதியனே
சுந்தர சோலை விராட புரியதன் சந்திரனே
கந்தரின் மூத்த வனாகிய மாகரி நாயகனே

வெண்பா
உத்தர திக்கதில் ஊர்ந்திடுந் தாயவள்
சத்திய வாக்கினில் வாழம ராவதி
நித்தமும் போற்றிட சக்கர நாயகன்
சத்தமு மின்றியிருந் தான்
கலித்துறை
வடதிசை காத்திட தில்லா புரியா ளிருந்திடவே
ஆடற் குடதிசை வாழ்ந்திடு சக்கர நாயகனே
தென்திசை நோக்கின் குறுமுனி யீசருஞ் சேர்ந்திடவே
அன்பொடு சொக்கரு மங்கயற் கண்ணியுங் கீழ்திசையே

வெண்பா
பகவா னவர்தங் கரத்தா லளித்தார்
தகவா யுனையே புவிவாழ் பவர்க்கு
மிகவே யருளதை சக்கர நாயகனே
வேகத் தருளிடு வாய்
கலித்துறை
சந்தன மாலையை சாற்றிட வேண்டிய காரணத்தால்
வந்தனங் கோடி மணத்திட மாண்பொடு சேர்த்திடுவேன்
தந்தன வென்றிட பாவகை பாட துணையெனவே
எந்தனை யென்றுமே யேற்றிடு சக்கர நாயகனே

வெண்பா
பாரத பூமியில் வாழ்ந்திடு மாந்தரை
நேரது வாண்டிட சக்கர நாயகன்
பாண்டவ ரைவருந் தங்கிட வோரிடங்
கண்டன னுத்தரக் கோன்
கலித்துறை
வேழ முகத்தா யெனமுன் னுரைத்திட வேண்டிடவே
தோழமை தந்தா யெனக்கென வானவ வேதியரே
பாழென வென்றிருந் தேனிப் புவிமிசை வாழ்வதனை
தாழென வீழ்ந்ததை நீக்கிய சக்கர நாயகனே

வெண்பா
ஆரியர் யாவரு மோதிடு மோவியம்
பாரினி லோருயிர் தானெனத் தோணின்
திராவிட மேற்றிடுஞ் சக்கர நாத
விராட நகரக் கரி
கலித்துறை
ஞானப் பொருளென ஞானியர் பால்தான் விளங்கிடுநல்
மோன வுருவமா யென்றனை யாட்கொள வேண்டியதால்
தேனத னைப்போ லினிக்குஞ் சக்கர நாயகனே
வானத னையா னடைய தருவா யொருவழியே

வெண்பா
கண்டிலேன் வானவ ராயிரம் போற்றிடும்
மண்ணிலே யென்றனுக் கோர்துணை யாகிடும்
விண்ணவன் வேணியன் மைந்தனு மாகிய
வண்ணத்து சக்கரத் தான்
கலித்துறை
அம்புலி தேய்ந்திட காரண மொன்றினை யாத்தவனே
தும்புரு நாரதர் தாமொடு வேதியர் போற்றிடவே
தம்பி யனென்றிட கூர்வடி வேலனை கொண்டவனே
வம்பென வொன்று வராம லறுத்திடு சக்கரமே

வெண்பா
அலையதிற் தோன்றிய தெள்ளமு தொத்தவன்
மாலை யணிந்திரு மாலின் மருமகன்
வேலை யதேயென சக்கர வேழனை
காலை யிலேதொழு வோம்
கலித்துறை
வாரண நாயக நால்திசை போற்றிடு தெள்ளியனை
காரண மின்றி கருத்தி லிருத்திடின் கற்பகத்தை
ஓரணங் கென்றவன் பொற்பதம் வேண்டி பிடித்திருப்பின்
பேரணங் காயிடுஞ் சக்கர நாயக வைங்கரனே

வெண்பா
தாமென் றிருப்பின் தடைக ளளித்திடும்
யாமென் றிருந்தா லதுவே விலகிடும்
வேழ முகத்து விநாயக சக்கரன்
தாழ்மலர் தானடை வீர்
கலித்துறை
கானகத் தேயுறை கின்ற கரியருஞ் சக்கரத்தை
நானகத் தேகண் டிடவே வழியொன் றெனவுளதோ
தானகத் தில்தோன் றிடவே யொருநாளுந் தீர்வெடுப்பார்
வானகத் தேவாழ்ந் துவருங் களிற்றினை வேண்டிடவே

வெண்பா
சுமையென் றிடுவா ரமுதென வாழ்வை
இமைபோ லதனை காத்திட வேண்டின்
உமையா ளவளுடை சக்கர மைந்தன்
தமைநா ளெனயேற் றிடுவார்
கலித்துறை
பாசமே வோர்வுரு வென்றிட நாளதுஞ் செப்புகையில்
ஈசருந் தேவியுஞ் சீரொடு காத்திட வந்திடுவார்
காசதைத் தான்தவிர்த் தேயிரு மன்ப ரவர்க்கருள
வாசனை யாவையுஞ் சக்கரஞ் சுற்றி யறுத்திடுமே

வெண்பா
தெண்டனிட் டேனுன் றமது பதமதில்
மண்டியிட் டேனைங் கரக்களிற் றான்றனை
பாவித் தெழுந்தேன் அலைமகட் சேயனை
சேவித் திருப்பேன்சக் கரத்தை
கலித்துறை
சேவகன் யானிவன் பாயிரம் யாத்தவை யாவதுமே
பாவகை ரெட்டை மணியது மாலையே சூட்டிடவே
தேவ விராட மலர்முக சக்கர நாயகனை
ஆவன யாவையுஞ் செய்திட வாழ்த்திட வேண்டினனே

தில்லைக்கூத்தனார் நீரோட்டக வெண்பா

அந்தியி லோர்நில வந்திடுவ ராயினுஞ்
சந்தியி லீர்நாடி சந்திர னாயினுங்
கந்தருட் சுந்தர சிந்தையி லோடிய
உந்தியில் ஊன்றிடு வாய்

ஆயிரங் கண்களால் காணுநல் வானதுவுந்
தீயினை கைகொண்டு ஆடிடுநல் லாதியுந்
தாயிலா நாதனை தில்லையில் கூறிட
வாயிலை யென்றன னின்று

இறையவரே யானந்த கூத்தவரே கூற்றன்
சிறையவரே சிறைகொண்ட நாதாக்கள் நாட்டோர்
நிறைகுறைக ளில்லாத வேட்டவரே வேடோர்
குறைகளைய நிந்தனுக்கே ஈசன்

ஈராறு தெள்ளுலகில் தேரார்கள் தானுண்டு
வேறாருந் தானறியார் வேணியனே வாணியனுந்
தீராறு வேதியருந் தேறாநற் சோதியனே
சீராறு வாய்கண்ட வுரை

உலகத்து வுய்யவே வூழியிலே வூன்றின்
கலகத்து காலத்தே கால்தூக்கி நிற்கின்
விலகத்தான் வேண்டிடின் நின்சரணந் தந்தால்
சலனத்தே யானிருக்க ஊன்

ஊரார் உரைத்திட வூரெங்குந் தேடிட்டேன்
தேறார் நினையறியார் கூறிடினுந் தெள்ளார்தெண்
நீராறெ னவென்னை யாரேனுங் கேட்டிட்டால்
வாரார் சிவநாதர் யெனின்


எண்ணங்க ளாயிரங்கள் சிந்தையிவ் வுள்ளத்தில்
திண்ணத்து வாடாது நின்றனையே வந்தெதிர்க்கின்
கண்ணத்து நாயனார் தான்செய்த நல்வினையை
வண்ணத்து நாயகனார் ஏற்க

ஏழுலகுந் தானறிந்து தாளாது வந்திடினுங்
கூழெதுவுந் தேவையிலை கூடியே கொண்டிடவே
தாழிட்ட ஓரகத்தில் நாகருடன் வேங்கையர்தான்
சூழ்ந்திடவே ஆடியதே ஐந்து

ஐயவரின் நேர்நிலையை யையறவே ஆய்ந்திட்டால்
கையதனிற் றான்கொண்ட வாசகத்தை தேர்ந்திடுவீர்
வையகத்து வேதநிலை யோதிடவே கேட்டிடுங்கால்
உய்ய வழியெனவே யொன்று

ஒருவன் உருவங் கணந்தனில் கண்டிடின்
தேருள் இருந்திடுந் தேனதை தந்திடின்
தாருடன் தாழ்கின்ற சோலை தருவினை
வீருடன் வேண்டியே ஓது

ஓயாது வோடாது வொண்ணாத வோவியத்தான்
சாயாது நின்ற விருகரங்கற் றான்நீட்டி
காயாது வாழ்வுங் கனிந்திடவே யக்கரங்கள்
தாயாக நல்கிய ஔவை

ஔவியங்க ளேதேனுந் தோன்றிட்டால் தேற்றிடுவான்
கவ்விடவே சிக்கென விண்ணவன் சிந்தனையை
தவ்வா தருவாக தண்ணிழலை தந்திடுவான்
எவ்விடத்தே தேடிடினுந் தான்